காய்ச்சல், இருமல் நோய் அறிகுறிகள் இருந்தால் சபரிமலை செல்ல அனுமதி கிடையாது
இவ்வருடம் மண்டல கால பூஜைகளுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உட்பட கொரோனா நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக வரும் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. மறுநாள் 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. மண்டல சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக இவ்வருடம் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பக்தர்களுக்கும், சனி ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களுக்கும் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
சபரிமலை செல்லும் பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து செல்லும் பக்தர்கள் சபரிமலை செல்லும் வழியில் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விவரங்களை கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அண்மையில் கொரோனா பாதித்தவர்கள் சபரிமலை செல்ல அனுமதி கிடையாது. காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், மணம், மற்றும் ருசி இல்லாதவர்கள் உட்பட கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை நிலக்கல் பகுதியில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் பக்தர்கள் காண்பிக்க வேண்டும்.
பக்தர்கள் தரிசனத்திற்கு வரிசையாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வரிசையில் நிற்கும் போது ஒவ்வொரு பக்தருக்கும் இடையே குறைந்தது 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். வரிசையில் நிற்கும் போது பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். இவ்வாறு கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.