சிம்பு மாநாட்டில் திடீர் முகாமிட்ட சித்த மருத்துவர் .. பாதுகாப்பை ஒப்படைத்த தயாரிப்பாளர்..
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர், எஸ் ஜே சூர்யா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துவரும் இந்தப்படம் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கே.எல்.பிரவீண் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக உமேஷ் பணியாற்றுகிறார். ஏற்கனவே சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், கொரோனா தொற்று காரணமாக படக்குழுவினருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என முடிவு செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படக்குழுவினரின் பாதுகாப்பு நடவடிக்கையாக சித்த மருத்துவர் வீரபாபுவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் படக்குழுவினர் அனைவருக்கும் படப்பிடிப்பு துவங்கும் முன்னரே கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் படக் குழுவினருக்கு தினசரி காலை, மாலை என இருவேளைகளிலும் மூலிகை கசாயம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி படக்குழுவினருக்கு அவரது வழிகாட்டுதலின்படி ஆரோக்கியமான உணவுமுறையும் பின்பற்றப்படுகிறது.
சொல்லப்போனால், கொரோனா தொற்றில் இருந்து படக் குழுவினரை பாதுகாப்பதற்காக, படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு மருத்துவ குழுவினர் கூடவே இருந்து, கவனித்து கொள்வது என்பது இதான் முதன்முறை.. அந்தவகையில் படக்குழுவினர் அனைவரும், கொரோனா தாக்கம் குறித்த எந்த அச்சமும் இன்றி படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தாக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, சித்த மருத்துவர் வீரபாபு இரவு பகல் பாராமல் தனது சிகிச்சை முறை மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளை குணப்படுத்தி மக்களின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.