அனுமதியின்றி தூதரகம் மூலம் மத நூல்கள் இறக்குமதி கேரள அமைச்சரிடம் சுங்க இலாகா விசாரணை
மத்திய அரசின் அனுமதியின்றி திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலம் மத நூல்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாகக் கேரள அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகா இன்று விசாரணை நடத்தி வருகிறது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் நாளுக்கு நாள் இந்த விவகாரத்தால் கேரள அரசுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுக்கு கேரள அரசில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்படப் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே ஸ்வப்னாவுடன் நெருக்கமாக இருந்த முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கர் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே தங்கக் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தியபோது முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியதும் வாட்ஸ்அப் மூலம் தகவல்களைப் பரிமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே சுங்க இலாகா நடத்திய விசாரணையில் அமைச்சர் ஜலீல் மத்திய அரசின் அனுமதியின்றி அமீரக தூதரகத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மத நூல்களை இறக்குமதி செய்தது தெரியவந்தது. இதற்கு ஸ்வப்னா சுரேஷ் உதவி புரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாகச் சுங்க இலாகா, மத்திய அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரணை நடத்தின. இந்நிலையில் கடந்த மாதம் அமைச்சர் ஜலீலிடம் தேசிய புலனாய்வு அமைப்பும், மத்திய அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது. அமைச்சர் ஜலீலிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணை கேரளாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுங்க இலாகாவும் அமைச்சர் ஜலீலிடம் விசாரணை நடத்தத் தீர்மானித்தது. இதையடுத்து இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அமைச்சர் ஜலீலுக்கு சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பியது. இதன்படி இன்று பிற்பகல் 12 மணியளவில் அமைச்சர் ஜலீல் கொச்சியில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் எனக் கருதப்படுகிறது. அமைச்சர் ஜலீலிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருவது கேரளா அரசுக்கு அடுத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.