சீவி முடித்து, சிங்காரித்து குட்டி யானைக்கு கேக் வெட்டி கோலாகல பிறந்தநாள்...!
ஆனந்த குளியல் போட்டு, சீவி முடித்துச் சிங்காரித்து தலையில் பூவும் வைத்து ஒரு குட்டி யானைக்குக் கோலாகலமாகப் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. போதாக்குறைக்கு கேக்கும் வெட்டப்பட்டது. திருவனந்தபுரம் அருகே உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் நடந்த குட்டி யானையின் பிறந்தநாள் விழாவைப் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் திரண்டிருந்தனர்.திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள கோட்டூர் காப்புக்காடு பகுதியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
வனப்பகுதியிலிருந்து மீட்கப்படும் யானைகள் இங்குப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர யானைகளுக்குச் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு யானைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளைப் பார்க்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி உண்டு. தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து யானைகளைக் கண்டு மகிழ்ந்து வருகின்றனர். இங்கு யானை மீது சவாரியும் செய்யலாம்.
இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் 6ம் தேதி தென்மலை வனப்பகுதியில் ஒரு குட்டி யானை தாயைப் பிரிந்து தனியாகத் தவித்துக் கொண்டிருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அது பிறந்து 2 நாள் மட்டுமே ஆன பெண் யானை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். தாயை இழந்து தவித்த அந்த குட்டி யானைக்குப் பால் மற்றும் இளநீர் கொடுக்கப்பட்டது. தாய் யானை திரும்ப வந்து அழைத்துப் போக வாய்ப்பு இருக்கலாம் என்பதால் வனத்துறையினர் அந்த குட்டி யானையை வனப்பகுதியில் வைத்தே கண்காணித்து வந்தனர்.
ஆனால் 2 நாளாகியும் தாய் யானை திரும்ப வராததால் நவம்பர் 8ம் தேதி அந்த குட்டி யானையை வனத்துறையினர் காப்புக்காட்டில் உள்ள யானைகள் முகாமுக்குக் கொண்டு சென்றனர். அங்கு வைத்து அந்த குட்டி யானையை ஊழியர்கள் பராமரித்து வந்தனர். தினமும் தேங்காய்ப் பால், லாக்டோஜன், குளுக்கோஸ், இளநீர் மற்றும் உணவுப் பொருள் ஆகியவை அதற்குக் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு சில மாதங்களிலேயே அந்த குட்டி யானை அங்கிருந்த ஊழியர்களிடம் மிகவும் நெருக்கமாகப் பழகத் தொடங்கியது.
இதற்கிடையே அந்த யானைக்கு ஸ்ரீ குட்டி எனப் பெயரும் சூட்டப்பட்டது. இந்நிலையில் இந்த குட்டி யானை, முகாமுக்கு வந்து நேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்த தொடர்ந்து முதலாவது பிறந்தநாள் விழா கொண்டாட ஊழியர்கள் தீர்மானித்தனர். இதையடுத்து ஊழியர்கள் நேற்று யானையைக் குளிப்பாட்டி நெற்றியில் திருநீறு வைத்து, தலையில் ஒரு பூவையும் சூட்டினர். பின்னர் கழுத்தில் ஒரு துண்டும் கட்டப்பட்டது.
பிறந்தநாளுக்காக 10 கிலோ எடையில் கொள்ளு மற்றும் வெல்லத்தால் பெரிய கேக்கும் தயாரிக்கப்பட்டது. பின்னர் ஊழியர்கள் அந்த ஸ்ரீ குட்டி யானையை அழைத்து வந்து கேக்கை வெட்ட வைத்து அதற்கு ஊட்டினர். ருசி பிடித்துப் போனதால் நிமிட நேரத்திலேயே கேக் முழுவதையும் அந்த யானை கபளீகரம் செய்தது. இந்த பிறந்தநாள் விழாவைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் அங்குத் திரண்டிருந்தனர். அனைவரும் அந்த யானைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி செல்பியும் எடுத்துக் கொண்டனர்.