தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் : ஆந்திர வாலிபர் கைது
ஆந்திராவில் இருந்து தமிழகம் வழியாகக் கேரளாவிற்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான 292 கிலோ கஞ்சாவைக் கடத்த முயன்ற ஆந்திர மாநில கஞ்சா வியாபாரி உட்பட இருவரைக் கேரள போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவில் இருந்து கேரளாவிற்குத் தமிழகம் வழியாகக் கஞ்சா கடத்தப்படுவதாகக் கேரள மாநிலம் பாலக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் வாகன தணிக்கையைத் தீவிரப்படுத்தினர்.
நேற்று இரவு வாகன தணிக்கையின் போது அவ்வழியே வந்த மினி லாரி ஒன்றை போலீசார் தடுத்தனர். ஆனால் வாகனத்தை ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றதை அடுத்து போலீசார் அதனைத் துரத்திச்சென்று மஞ்சாகுளம் என்ற இடத்தில் மடக்கிப்பிடித்தனர்.
வாகனத்தைச் சோதனை செய்த போது தண்ணீர் கேன்களுக்கு அடியில் மூட்டை மூட்டையாகக் கஞ்சா பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்த இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த போரெஸ்ஸி வெங்கடேஸ்வரலு ரெட்டி (35), மற்றும் , சேலம் பனைமரத்துப்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த டிரைவர் வினோத் குமார் (27) ஆகிய யோர் என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 292 கிலோ கஞ்சா மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்டுள்ள வெங்கடேஸ்வரலு ஆந்திராவில் பிரபல கஞ்சா வியாபாரியாவார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.