`அந்த வலி யாருக்கும் வேண்டாம்!- ஸ்மித்துக்காக உருகும் டூப்ளிசிஸ்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை விதிகளுக்கு புறம்பாக சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னருக்கு கிரிக்கெட்டில் விளையாடுவதிலிருந்து ஓராண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் ஃபாப் டூப்ளிசிஸ் மனம் திறந்து பேசியுள்ளார். கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது ஆஸ்திரேலிய அணியின் பந்தை சேதப்படுத்தும் செயல்பாடு.
அதைவிட பேரதிர்ச்சி, இதில் ஈடுபட்ட வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கொடுத்திருக்கும் தண்டனை. பந்தை நேரடியாக சேதப்படுத்திய பேங்க்ராஃப்ட்டுக்கு 9 மாத தடையும், அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் விதித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
இந்நிலையில், நேற்று அந்நாட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்மித், கண்ணீர் மல்க மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் குறித்து டூப்ளிசஸ், `எந்த ஒரு மனிதனுக்கும் தற்போது அந்த வீரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலி இருக்க கூடாது.
அடுத்த சில தினங்கள் அவர்கள் வாழ்க்கையில் மிகக் கடினமான நாட்களாக இருக்கப் போகின்றன. குறிப்பாக, ஸ்மித்தை நினைத்து நிறைய பரிதாபப்படுகிறேன். அவர் மேல் எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. அவர் ஆஸ்திரேலிய அணிக்குக் கிடைத்த மிகச் சிறந்த கேப்டன். அவருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன். இந்நேரத்தில், அவர் உறுதியாக இருந்தேயாக வேண்டும்’ என்று தன் நண்பன் ஸ்மித்துக்கு மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com