பாஜகவில் இணைய அதிரடி நடிகை திட்டம் விரைவில் முடிவு அறிவிப்பு
பாஜகவில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பிரபல நடிகை விஜயசாந்தி, அக்கட்சியிலிருந்து விலகி சொந்தக் கட்சி நடத்திய பின்னர் காங்கிரசில் சேர்ந்து தற்போது மீண்டும் அவர் பாஜகவில் இணைய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நடிகை விஜயசாந்தி தெலுங்கு நடிகையாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். கல்லுக்குள் ஈரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்த இவர், நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால், சிவப்பு மல்லி, நிழல் தேடும் நெஞ்சங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படம் மிகவும் பரபரப்பாக ஓடியது. இந்தப் படத்திற்கு பின்னர் தான் இவருக்கு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும், அதிரடி நடிகை என்ற பெயரும் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 1998ல் இவர் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். முதலில் பாஜகவில் சேர்ந்த இவர் அக்கட்சியின் மகளிர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர் தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர், பாஜகவிலிருந்து விலகி தல்லி தெலங்கானா என்ற பெயரில் சொந்த கட்சியை தொடங்கினார். விஜயசாந்தியால் நீண்டகாலம் தன்னுடைய கட்சியை கொண்டு செல்ல முடியவில்லை. 2009ல் தன்னுடைய கட்சியை சந்திரசேகர் ராவின் டிஆர்எஸ் கட்சியுடன் இணைத்தார். இதன்பின்னர் மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார். சில காலத்திற்குப் பின்னர் டிஆர்எஸ் கட்சி தன்னை புறக்கணிப்பதாக கூறி அதிலிருந்து விலகி 2014ல் இவர் காங்கிரசில் இணைந்தார். கடந்த 6 வருடங்களாக அவர் காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலங்கானாவில் துப்பாக் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு வந்த பின்னர் இவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என கருதப்படுகிறது.