எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை.. வருகிறது கொரோனா தடுப்பு மருந்து!

சென்னை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்து 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்குப் பின்பு குறையத் தொடங்கி, அக்.12ம் தேதி 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. இதைத் தொடர்ந்து, புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து தற்போது 2 ஆயிரத்துக்கு வந்துள்ளது. நேற்று(நவ.7) 75,384 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2334 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 43,822 பேராக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2386 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 13,584 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 20 பேர் பலியானார்கள்.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான தங்கள் நிறுவனத்தின் தடுப்பு மருந்து 90 சதவிகிதம் வெற்றிபெற்றுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த pfizer தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து 90% மக்களுக்கு அந்நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டவர்களில் யாருக்கும் இதுவரை பாதுகாப்பு பிரச்னை எழவில்லை. 6 நாடுகளில் 43,500 பேருக்கு இம்மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மருந்து விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>