சபரிமலை செல்லும் பாதையில் கொரோனா பரிசோதனை நடத்த சிறப்பு வசதி

மண்டலக் கால பூஜைகளுக்காகச் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சபரிமலை செல்லும் பாதையில் கொரோனா பரிசோதனை நடத்தத் தேவையான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் இவ்வருட மண்டலக் கால பூஜைகள் வரும் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி 15ம் தேதி மாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும்.

கொரோனா பரவலைத் தொடர்ந்து இவ்வருடம் மண்டலக் கால பூஜைகளுக்காகச் செல்லும் பக்தர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கேரள சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்முறை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சுவை, மணம் போன்றவற்றை அறிய முடியாமல் இருத்தல் உள்பட நோய் அறிகுறி இருப்பவர்கள் யாரும் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று கேரள சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தரிசனத்திற்கு வரும் போது 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அறிவித்துள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு இது சிரமமாக இருக்கும்.

இதனால் கேரளா சென்ற பின்னர் சபரிமலை செல்லும் வழியில் ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை நடத்த முக்கிய இடங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.சபரிமலை செல்லும் பாதையில் அனைத்து முக்கிய இடங்களிலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் சைலஜா மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குப் பரிசோதனை நடத்திய பின்னர் பக்தர்கள் அந்த சான்றிதழை நிலக்கல்லில் உள்ள சுகாதாரத் துறை மையத்தில் காண்பிக்க வேண்டும். அதன் பின்னரே தரிசனத்திற்குச் செல்ல முடியும். இதற்கிடையே சித்திரை ஆட்டத் திருநாள் சிறப்புப் பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் நடை 12ம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. மறுநாள் 13ம் தேதி சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகள் நடைபெறும். அன்று இரவே கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டலக் கால பூஜைகளுக்காக 2 நாட்களுக்குப் பின்னர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

More News >>