முகக்கவசம் அணிய சிரமம் உள்ளவர்களுக்கு துபாய் அரசு சலுகை
முகக்கவசம் அணிவதால் உடல் ரீதியாகச் சிரமம் ஏற்படுபவர்களுக்குச் சலுகை அளிக்கத் துபாய் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இணையதளத்தில் விண்ணப்பித்தால் 5 நாட்களில் தேவையான உதவிகள் கிடைக்கும்.கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கது முகக் கவசம் அணிவது ஆகும். இதனால் அனைத்து நாடுகளிலும் பொது இடங்களில் செல்பவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு எதிராக அபராதம் உள்படச் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்றாலும் முகக் கவசம் அணிவதன் மூலம் உடல் ரீதியாகச் சிரமப்படுபவர்களும் இருக்கின்றனர். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள் கடும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.
இந்நிலையில் முகக்கவசம் அணிவதால் உடல் ரீதியாகத் துன்பப்படுபவர்களுக்குச் சலுகை அளிக்கத் துபாய் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சலுகை தேவைப்படுபவர்கள் துபாய் சுகாதாரத் துறையின் http://dxbpermit.gov.ae என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் உடல் ரீதியான பிரச்சினை குறித்த மருத்துவ சான்றிதழையும் இணைக்க வேண்டும். இதன்படி விண்ணப்பித்தால் 5 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களைத் துபாய் அரசின் சுகாதாரத் துறை கமிட்டி பரிசீலிக்கும்.
பொது மக்களின் சுகாதார நலனுக்காகவே இந்த சலுகை அளிக்கப்படுகிறது என்று துபாய் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர் விண்ணப்பத்துடன் எமிரேட்ஸ் ஐடியையும் கண்டிப்பாகத் தாக்கல் செய்ய வேண்டும். முகத்தில் இருந்து ரத்தம் கசியும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சொறி, வறண்ட தோல் உள்ளவர்கள், வாய், மூக்கு முகம் ஆகியவற்றில் சொறி இருப்பவர்கள், முகத்தில் தொடர்ந்து வீக்கம் உள்ளவர்கள், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்படும்.