ஸ்மித் ஊழல்வாதி அல்ல ஊதிய உயர்வுக்காக செய்த கலகமே காரணம் - கம்பீர் அதிரடி
ஸ்டீவ் ஸ்மித் ஊழல்வாதி அல்ல என்றும் ஊதிய உயர்வுக்காக போராடியதற்கு கொடுக்கப்பட்ட விலைதான் ஓராண்டு தடை என்றும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேங்க்ராஃப்ட் பந்தை விதிகளுக்குப் புறம்பாக சேதப்படுத்தியது அம்பலமானது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பேட்ஸ்மேன் பேங்க்ராஃப்ட் ஆகியோர் உடனடியாக சொந்த நாட்டுக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால், இவர்களின் பதவி பறிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஸ்மித் ஒரு டெஸ்டில் விளையாட தடை, 100 சதவீத சம்பளம் அபராதமாக விதித்தது. பான்கிராப்டுக்கு, 75 சதவீத சம்பளம் மட்டும் அபாராதம் விதிக்கப்பட்டது.
ஆனால், இந்த சம்பவம் குறித்து அதிருப்தி அடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு, ஸ்மித், வார்னர் இருவரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 12 மாதங்கள் தடை விதித்தது. மேலும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவர்கள் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக செயல்படவும் தடை விதிக்கப்பட்டது.
மேலும் படிக்க: என்னை மன்னித்து விடுங்கள் - கண்ணீர் மல்க பேட்டியளித்த ஸ்மித்
இந்நிலையில் இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், “ஊழலற்ற கிரிக்கெட் தேவையாக இருக்க வேண்டும் என்றாலும் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை கொஞ்சம் கடுமையானதுதான். ஸ்டீவ் ஸ்மித்தும் டேவிட் வார்னரும் சம்பள உயர்வுக்காக போராடியதற்கான விலையா?
அமைப்புடன் எதிர்த்துப் போராடினால் நிர்வாகிகள் வீரர்களை இவ்வாறு செய்வதற்கான வரலாறு உள்ளது. சிறந்த உதாரணம்: இயன் சாப்பல்.
ஸ்டீவ் ஸ்மித் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினருக்காக வருந்துகிறேன். அவர்களின் குடும்பத்தினர் எளிதான இலக்கு என்பதால், ஊடகங்களும், ஆஸ்திரேலிய மக்களும் இவர்களை மன்னித்து விடுவார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், தடையை விட ‘ஏமாற்றுக்காரன்’ என்ற பெயரைச் சுமந்து கொண்டு வாழ்வது கடினம். இதுதான் பெரிய தண்டனை.
நான் உணர்ச்சி வசப்படுகிறேன் என்று நினைக்கிறேன், என்னைப் பொறுத்தவரையில் ஸ்டீவ் ஸ்மித் மோசடிக்காரர் அல்ல. அவரைப் பற்றி எனக்கு தெரியாது என்றாலும், நான் பார்த்தவரையில் நாட்டுக்காக டெஸ்ட் போட்டியில் தனது அணியை வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு கேப்டனாகவே பார்க்கிறேன். ஆம், அவர் கையாண்ட முறைகள் கேள்விக்குறியது தான். ஆனால் அவரை ஊழல்வாதி என்று முத்திரை குத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com