மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகிய அர்னாப் கோஸ்வாமி
ரிபப்ளிக் டிவியின் உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயின் தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து ஜாமீன் கோரி அர்னாப் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.ரிபப்ளிக் டிவியின் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்கட்டமைப்பு அலங்காரம் செய்வதற்கு மும்பையைச் சேர்ந்த அன்வே நாயக் என்பவர் காண்ட்ராக்ட் எடுத்திருந்தார்.
பணிகள் முடிந்து ₹5.4 கோடிக்கு அவர் பில் கொடுத்தார். ஆனால் அதில் மிகக் குறைவான பணத்தையே ரிபப்ளிக் டிவி நிர்வாகம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பலமுறை அவர் ரிபப்ளிக் டிவி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டபோதும் எந்த பலனும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் அன்வே நாயக்கும், அவரது தாயும் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு முன் அன்வே நாயக் எழுதிய கடிதத்தில், தன்னுடைய மற்றும் தன்னுடைய தாயின் தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.இதுதொடர்பாக அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் அப்போது இருந்த பாஜக அரசு இந்த வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் முதல்வராக பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரே இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுத்தார். மீண்டும் போலீசார் தற்கொலை தொடர்பான விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் கடந்த வாரம் அர்னாப் கோஸ்வாமியை அவரது வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள சிறைக் கைதிகளுக்கான கொரோனா தனிமை முகாமில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார்.ஆனால் தனிமை முகாமில் வைத்து அவர் செல்போன் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ஜாமீன் கோரி அர்னாப் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீனுக்காக அலிபாக் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகவும், 4 நாட்களில் அதில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் ஜாமீன் கோரி அர்னாப் கோஸ்வாமி இன்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.