ராஜீவ்காந்தி கொலை வழக்கு : 7 பேரை உடனடியாக விடுவிக்க வாய்ப்பில்லை : முதல்வர்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.இன்று நாகர்கோவில் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத வழங்கத் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது போல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்னும் அனுமதி வழங்காத நிலையில் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இது சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரம். இலங்கையில் நல்ல நிலையில் உள்ள படகுகள் அனைத்தையும் ஏற்கெனவே தமிழக மீனவர்கள் மீட்டுக் கொண்டு கொண்டு வந்து விட்டனர் எஞ்சியுள்ள 121 படகுகளும் பழுதடைந்து விட்டது. அந்த படகுகளைத் தான் அங்குள்ள நீதிமன்றம் அழிக்க உத்தரவிட்டுள்ளது .
கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அம்மாநில அரசுகளின் ஒப்புதல் பெறவேண்டும் என்று அந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. அதைப் போலத் தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை. அது போன்ற சூழ்நிலை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார்.கேரளாவில் கொரோனா நோய் பரவல் அதிகமாக உள்ளதால் அங்கு இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரளாவிலிருந்து வருபவர்களால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரவினால் அது தமிழகம் முழுவதும் பரவிவிடும். எனவே அதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாகவும் இதற்கு அரசு எடுத்த நடவடிக்கையே காரணம் என்றும் அவர் கூறினார்.