வாட்ஸ்அப் மூலம் பொருள்களை வாங்கலாம் ஷாப்பிங் பட்டன் அறிமுகம்
வணிக நிறுவனங்களில் என்னென்ன தயாரிப்புகள் கிடைக்கின்றன என்பதை விரைந்து பார்ப்பதற்கு வசதியாக வாட்ஸ்அப் செயலியில் 'ஷாப்பிங்' (shopping) என்ற பொத்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தங்கள் தயாரிப்புகள் மற்றும் விற்கும் பொருள்கள் குறித்த விவரப்பட்டியலான கேட்லாக்கை கொண்டிருக்கும் வணிக நிறுவனங்களுக்கான 'சாட் ஸ்கிரீன்'இல் மட்டும் ஷாப்பிங் என்ற பொத்தானை பார்க்க இயலும். தற்போது இருக்கும் 'call' என்ற அழைப்பு பொத்தானை மாற்றி அதற்குப் பதிலாக 'shopping' என்ற பொத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வணிக கணக்குகளுக்கே பொருந்துமாதலால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்ற தனிப்பட்ட தொடர்புகளின்போது 'ஷாப்பிங்' பொத்தானை பார்க்க இயலாது.
ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் வாட்ஸ்அப் பீட்டா வடிவில் இவ்வசதி இருந்தது. இப்போது உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு ஷாப்பிங் வசதி கிடைக்கிறது. ஷாப்பிங் பொத்தானை பயனர் அழுத்தி, குறிப்பிட்ட அந்நிறுவனத்தில் கிடைக்கும் பொருள்களை பார்த்து தேவையானவற்றை வாங்கிக் கொள்ள முடியும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாட்ஸ்அப் பிசினஸ் செயலி சிறுவணிக நிறுவனங்கள் வாட்ஸ்அப் பயனர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும்வண்ணம் கேட்லாக் என்ற வசதியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. அதன்படி தங்கள் தயாரிப்புகளை கொண்ட விவரபட்டியலை (கேட்லாக்) உருவாக்கிய நிறுவனங்களின் பொருள்களை வாட்ஸ்அப் பயனர்கள் தற்போது பார்க்க இயலும்.