ம.பி. இடைத்தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி.. ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது..
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 28 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் 18ஐ பாஜக பிடித்தது. இதனால் சிவராஜ்சிங் சவுகானின் ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது.மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், காங்கிரசில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுத்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது.
பாஜகவின் சிவராஜ் சவுகான் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவினர். இவர்கள் அனைவருமே, காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்குத் தாவிய ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் கட்சித் தாவுவதற்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதே போல், ஏற்கனவே எம்.எல்.ஏ இறந்து விட்டதால் காலியாக இருந்த 3 தொகுதிகளுக்கும் சேர்த்து மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளில் நவ.3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 19 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. பாஜக 49.5 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 40.5 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.மத்தியப் பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜயசிங் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
அதாவது, பாஜகவின் வெற்றிக்காகக் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளைத் தேர்வு செய்து, முறைகேடு செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறக் கூடிய தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்குகளை மோசடி செய்து வென்றிருக்கிறார்கள். இது பற்றி நாங்கள் ஆய்வு செய்து ஆலோசனை செய்யவிருக்கிறாம் என்றார்.இந்நிலையில், வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று வழக்கம் போல் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.