இறுதிப்போட்டிக்கு ஜெயந்த் யாதவை தேர்வு செய்தது ஏன்?
இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் ஆப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் ஒரு போட்டியில் மட்டும் தான் ஆடினார். ஆனால் அந்த போட்டியில் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை. ஆனாலும் நன்றாகப் பந்துவீசும் ராகுல் சாஹரை நீக்கிவிட்டு இறுதிப் போட்டியில் ஜெயந்த் யாதவை தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
நேற்று துபாய் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை அணி 5வது முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. டெல்லி அணி எடுத்த 156 ரன்களை 8 பந்துகள் மற்றும் 5 விக்கெட்டுகளை பாக்கி வைத்து மும்பை அபார வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டிக்கு இருக்க வேண்டிய எந்த பரபரப்பும் நேற்றைய போட்டியில் காணப்படவில்லை. இதற்கு மும்பை வீரர்களின் அபார பந்து வீச்சும், பேட்டிங்கும் தான் காரணமாகும். ஐபிஎல் போட்டியில் இதுவரை சென்னை அணி மட்டுமே அடுத்தடுத்து இரண்டு வருடங்கள் கோப்பையை வென்றது. அந்த சாதனையை இப்போது மும்பை அணியும் படைத்துள்ளது சென்னை அணி 2010 மற்றும் 2011ம் வருடங்களில் கோப்பையை வென்றது. தற்போது மும்பை அணி கடந்த வருடமும், இந்த வருடமும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய இறுதிப் போட்டியில் மும்பை அணியில் சிறப்பாகப் பந்துவீசிக் கொண்டிருக்கும் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹருக்கு பதிலாகக் கடைசி நிமிடத்தில் ஆப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார். இது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ராகுல் சாஹர் சிறப்பாகப் பந்து வீசிக் கொண்டிருக்கிறார். கடைசியாக டெல்லி அணியுடன் நடந்த போட்டியில் மட்டுமே அவரது பந்து வீச்சு எடுபடாமல் போனது. அந்தப் போட்டியில் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசி அவர் 35 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் ராகுல் சாஹருக்கு மன வருத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அன்று போட்டி முடிந்து மைதானத்தை விட்டு வெளியே செல்லும்போது ராகுல் சாஹரை ரோகித் சர்மா பிடித்து இழுத்து வந்து அணியை வழிநடத்திச் செல்லுமாறு கூறினார். இந்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாக பரவியது.
ஆப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் இந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் தான் விளையாடினார். அதுவும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவரது பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. விக்கெட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இறுதிப் போட்டியில் எந்த தைரியத்தில் ஜெயந்த் யாதவை ரோகித் சர்மா தேர்வு செய்தார் என்பது குறித்து போட்டி தொடங்கும் வரை மும்பை ரசிகர்கள் பரபரப்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஆனால் போட்டி தொடங்கிய பின்னர் அதிரடி வீரர் ஷிகர் தவானை ஜெயந்த் யாதவ் கிளீன் பவுல்டு செய்த பின்னர் தான் அதற்கான காரணம் அனைவருக்கும் தெரியவந்தது.
இதுகுறித்து போட்டி தொடங்குவதற்கு முன் ரோகித் சர்மா விளக்கமளித்தார். அவர் கூறியது: ராகுல் சாஹருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவை தேர்வு செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. டெல்லி அணியில் ஏகப்பட்ட இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களைச் சமாளிக்க லெக் ஸ்பின்னருக்கு பதிலாக ஆப் ஸ்பின்னர் தான் சரியான தேர்வாகும் என நான் கருதினேன். மும்பை அணியில் அனைத்து வீரர்களும் நல்ல உடல் திறனுடன் உள்ளனர். ராகுல் சாஹரை நீக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை என்பது உண்மை தான். ஆனாலும் அணியின் வெற்றி தான் என்னுடைய குறிக்கோள் ஆகும். அதற்காகத் தான் ஜெயந்த் யாதவை அணியில் சேர்த்தேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.