ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரடியாக ரசித்த மலையாள சூப்பர் ஸ்டார்...!
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்றார். அவருக்கு ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல சர்வதேச வீரர்களும் ஐபிஎல் விளையாட மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாதது பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரும் இழப்பாகும் என்று அந்த அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார். இந்தியாவில் இப்போட்டி நடைபெறும் போதும் உலகம் முழுவதும் டிவிகளில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் போட்டிகளைப் பார்த்து வருகின்றனர். இந்திய மைதானங்களில் போட்டி நடைபெறும் போது பெரும்பாலான போட்டிகளில் ஷாருக்கான், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ரஜினிகாந்த், வெங்கடேஷ் உள்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் போட்டிகளை பார்ப்பதற்கு வருவார்கள்.
பிரபல சினிமா நட்சத்திரங்கள் போட்டிகளைக் காண வருவது ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாகப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா ஆகிய இரு நட்சத்திரங்கள் மட்டுமே போட்டியைக் காண இம்முறை வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று துபாயில் நடந்த இறுதிப்போட்டியைப் பார்ப்பதற்குப் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்றிருந்தார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லால் போட்டியை காண வந்துள்ளார் என்று மைதானத்தில் அறிவிப்பும் செய்யப்பட்டது. மோகன்லால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் திரிஷ்யம் 2 படப்பிடிப்பை முடித்தார். படப்பிடிப்பு முடித்த கையோடு நேற்று துபாய் புறப்பட்டு சென்று ஐபிஎல் போட்டியை ரசித்தார். அவர் மைதானத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.