ஓடிடி தளங்கள், ஆன்லைன் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு...
இந்தியாவில் ஆன்லைன் மீடியா மற்றும் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திடீர் முடிவு எடுத்துள்ளது. என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தியாவில் தற்போது ஓவர் தி டாப் மீடியா என அழைக்கப்படும் ஓடிடி தளங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஸீ 5, எம்எக்ஸ் பிளேயர் உள்பட இந்தியாவில் சுமார் 40 ஓடிடி தளங்கள் இயங்கி வருகின்றன. தற்போது கொரோனா பரவல் என்பதால் பல மாதங்களாக நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்தன. இதனால் மக்களுக்கு இந்த ஓடிடி தளங்கள் தான் பெரும் பொழுது போக்கு அம்சமாக இருந்து வருகிறது. இதனால் கொரோனா பரவல் காரணமாக தியேட்டரில் வெளியிட முடியாமல் இருந்த ஏராளமான படங்கள் இந்த தளங்களில் வெளியிடப்பட்டது.
இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும் கிடைத்தது. ஓடிடி தனங்களில் சினிமாக்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போதிலும் வருங்காலத்தில் இதில் வெளியாகும் சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு சூர்யாவின் சூரரைப் போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உட்பட ஏராளமான படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன. இந்நிலையில் இந்த தளங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போட திடீர் முடிவு எடுத்துள்ளது. இந்த தளங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு இன்று வெளியாகியுள்ளது. இதே போல ஆன்லைன் மீடியாக்களும் தகவல் ஒலிபரப்புத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி சாதாரண டிவி சேனல்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் இவற்றுக்கும் பொருந்தும். இது தவிர வேறு கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கருதப்படுகிறது.