`கேரளாவில் தொழில் தொடங்குவதை சுலபமாக்குவேன்!- பினராயி விஜயன்
கேரள மாநில முதலவர் பினராயி விஜயன், `எங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்குவதை சுலபமாக்க அனைத்து வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட்டுகள், இந்திய அளவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரே மாநிலம் கேரளா. அங்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஏதாவது பிரச்னை என்றால் பெருந்திரளான மக்கள் போராட தெருவுக்கு வந்துவிடுவார்கள். பொதுவாகவே, கம்யூனிச சித்தாந்தத்தில் வளர்ந்த மாநிலம் என்பதுதான் இதற்குக் காரணம்.
இதனால், அங்கு தொழில் தொடங்குவது கடினம் என்றொரு பார்வை முதலாளிகள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் இதைப் போக்க பினராயி விஜயன் முயற்சி எடுத்துள்ளார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே, சர்வதேச டிஜிட்டல் மாநாட்டை முதன்முறையாக கேரளாவில் ஒருங்கிணைத்தார்.
இதில் இன்டெல், டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்நிலையில் விஜயன், `கேரளாவில் தொழில் தொடங்குவதை சுலபமாக்க இதுவரை எங்களுக்கு வந்த புகார்களை நிவர்த்தி செய்து வருகிறோம். மாநிலத்தை முதலீடு செய்வோருக்கு சாதகமாக மாற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறோம்.
ஆணை பெற நிலவி வரும் தேவையற்ற கால தாமதத்தை போக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் மாநிலத்தில் நில வசதி குறைவாகவே உள்ளது. அதை சரி செய்யவும், மக்களிடமிருந்து நிலத்தை முறையான வழியில் வாங்கவும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com