அர்னாபுக்கு ஜாமீன் மகாராஷ்டிர அரசு, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ரிபப்ளிக் டிவியின் மும்பை தலைமையகத்தில் உள்கட்டமைப்பு அலங்கார பணி செய்த அன்வே நாயக் என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய தற்கொலைக்கு ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் என்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

உள்கட்டமைப்பு பணிகள் செய்ததற்கான பணத்தை ரிபப்ளிக் டிவி நிறுவனம் கொடுக்கவில்லை என்றும், அதனால் மனமுடைந்து அன்வே நாயக் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக அர்னாப் மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்த போதிலும், தற்கொலைக்கு அர்னாப் காரணமில்லை என்று கூறி பின்னர் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து போலீசார் அர்னாபை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் 2 வாரம் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அர்னாப் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கீழ் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று கூறி அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனு இன்று நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிர அரசுக்கும், மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் நீதிபதி சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். மாநில அரசு தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்கு எதிராக இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் உச்சநீதிமன்றம் அதில் தலையிட வேண்டிய நிலை ஏற்படும். மும்பை உயர் நீதிமன்றம் தன்னுடைய கடமையிலிருந்து தவறி விட்டது. ட்வீட் செய்த குற்றத்திற்காகக் கூட ஆட்களைச் சிறையில் அடைக்கின்றனர். கொடுக்க வேண்டிய பணத்திற்காக ஒருவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய வேண்டிய என்ன அவசியம் ஏற்பட்டது? அர்னாப் தற்கொலைக்குத் தூண்டினார் எனக் கூறுவதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது? இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

More News >>