உலகின் முதல் மொபைல் ஆப்டிமைஸ்டு டி.வி.: இந்தியாவில் அறிமுகம்
கிடைமட்டம் (horizontal) மற்றும் செங்குத்து (vertical) நிலைகளுக்கு மாறக்கூடிய மொபைல் ஆப்டிமைஸ்டு தொலைக்காட்சியை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 'செரோ' (Sero) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைக்காட்சியின் திரை 43 அங்குலமாகும்.
வாடிக்கையாளர்கள் இப்போது டி.விக்களை முன்பை காட்டிலும் வித்தியாசமான வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் வீடியோக்களை பார்த்தல் மற்றும் தங்களுக்கு விருப்பமான ஓடிடி காட்சிகளை பார்த்தல் போன்றவற்றிற்கும் டி.விக்களை பயன்படுத்துவதால் அவர்களது காட்சி அனுபவத்தை மாற்றியமைக்கும் வண்ணம் பெரிதான திரையை முயற்சித்துள்ளோம் என்று சாம்சங் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
'செரோ' (Sero) என்ற கொரிய வார்த்தைக்கு 'செங்குத்து' (Vertical) என்று பொருளாகும். தற்போதையை தலைமுறையினர் சமூக ஊடகங்களை பார்க்கும் வழக்கமுடையவர்கள் என்பதால் அவர்களுடைய ஆர்வத்துக்கு ஏற்றபடி இத்தொலைக்காட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வகையான செங்குத்து பின்னணிகளை தெரிவு செய்து கொள்ள முடியும். இதிலுள்ள ஆம்பியன்ட் மோடு+ பல்வேறு பயனுள்ள தகவல்களை காட்சிப்படுத்த உதவும்.
சாம்சங்கின் செரோ தொலைக்காட்சி ரிலையன்ஸ் டிஜிட்டல் அங்காடிகளில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை ரூ.1,24,990/- ஆகும்.