போதைப் பொருள் கடத்தல் வழக்கு.. சிறைக்கு சென்ற சிபிஎம் மாநில செயலாளரின் மகன்

பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பண உதவி செய்ததாக கூறப்பட்ட புகாரில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள மாநில சிபிஎம் செயலாளரின் மகன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடந்த இரு மாதங்களுக்கு முன் மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி விசாரணை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளுடன் கன்னட டிவி நடிகை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கேரளாவைச் சேர்ந்த முஹம்மது அனூப் மற்றும் ரவீந்திரன் ஆகியோருக்கு கேரள மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் லட்சக்கணக்கில் பண உதவி செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து மத்திய அமலாக்கத் துறையினர் பினீஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை பெங்களூருவுக்கு வரவழைத்து கைது செய்தனர்.தொடர்ந்து அவர் 12 நாள் மத்திய அமலாக்கத் துறையின் காவலில் விடப்பட்டார். இதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் பினீஷுக்கு கேரளா உள்பட பல்வேறு இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்து இருப்பது தெரியவந்தது. கடந்த 7 வருடங்களில் அவரது வங்கிக் கணக்கில் 5 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்தப் பணம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்தது என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையினர் கேரளாவில் உள்ள பினீஷின் வீடு மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. இந்நிலையில் இன்றுடன் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து பினீஷை மத்திய அமலாக்கத் துறையினர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட பத்திரிகைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பினீஷ் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. சிபிஎம் மாநில செயலாளரின் மகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொடர்ந்து கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News >>