கொரோனாவில் இருந்து குணமான மத்திய அமைச்சர்..
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார். சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்தார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டனர்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கும் கொரோனா தொற்று பாதித்தது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த அக்.28ம் தேதி தெரிவித்திருந்தார். அதில் அவர், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஸ்மிரிதி இராணி தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் இன்று(நவ.12) காலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், நான் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ததில், நெகட்டிவ் என்று வந்துள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் மற்றும் எனக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.