பல்கலைக்கழக பாடத்தில் அருந்ததி ராய் புத்தகம் நீக்கம்.. கனிமொழி கண்டனம்..

திருநெல்வேலி பல்கலைக்கழக எம்.ஏ. பாடத்திட்டத்தில் அருந்ததி ராய் புத்தகம் பற்றிய பாடம் நீக்கப்பட்டதற்குக் கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, “வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்” என்ற ஆங்கிலப் புத்தகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு சேர்க்கப்பட்டிருந்தது. எம்.ஏ.(ஆங்கிலம்) 3வது செமஸ்டரில் இந்த புத்தகம் பாடமாக இருந்தது. புத்தகத்தில் நக்சலைட்டுகளை நியாயப்படுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ளதாகவும், அவற்றை நீக்க வேண்டுமென்றும் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு குற்றம்சாட்டியது.

இதையடுத்து, அருந்ததி ராய் எழுதிய புத்தகம், எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக எம்.கிருஷ்ணன் எழுதியுள்ள மை நேட்டிவ் லேண்ட் என்ற புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சு மணி தெரிவித்துள்ளார்.இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:எது கலை, எது இலக்கியம், எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று ஆட்சியதிகாரமும், அரசியலும் முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

More News >>