தேஜஸ்வி யாதவ் நல்ல பையன்.. பாஜக தலைவர் வாழ்த்து..
தேஜஸ்வி யாதவ் நல்ல பையன். ஆட்சிக்கு வருவதற்கு அவருக்கு இன்னும் வயது வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறினார்.பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக 74 தொகுதிகளிலும், ஜேடியு 43 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வென்றிருக்கின்றன. லாலு மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19 மற்றும் இடதுசாரிகள் 16 என்று 110 தொகுதிகளில் வென்றுள்ளன.
இதையடுத்து, பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஆர்ஜேடி கூட்டணியை விட வெறும் 0.3 சதவீத வாக்குகள் மட்டுமே பாஜக கூட்டணி அதிகம் பெற்றிருக்கிறது.இந்நிலையில், போபாலில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி கூறுகையில், லாலு மகன் தேஜஸ்வி யாதவ் மிகவும் நல்ல பையன். ஆனால், மாநிலத்தைத் தலைமை ஏற்று நடத்தும் அளவுக்கு அனுபவம் இல்லாதவர். அவரை நினைத்து லாலு பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், பீகாரில் காட்டாட்சி நடத்தியவர் லாலுபிரசாத் யாதவ். பீகார் நூலிழையில் காப்பாற்றப்பட்டு விட்டது.
தேஜஸ்வி வயது முதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஆட்சிக்கு வரலாம் என்று தெரிவித்தார்.மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் குறித்து அவர் கூறுகையில்,கமல்நாத் எனது மூத்த சகோதரர் போன்றவர். நல்ல மனிதர். அவர் காங்கிரசுக்காக இடைத்தேர்தலில் கடுமையாகப் போராடினார். ஆனாலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இப்போது முயற்சிப்பதை ஆட்சி நடத்தும் போது அவர் செய்திருக்கலாம்என்றார்.