ஹோட்டலில் தங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச கொள்ளை கும்பல் அதிரடி கைது
திருவனந்தபுரத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மியான்மர், நேபாளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை ஈரான் நாட்டைச் சேர்ந்த 4 பேர் அறை எடுத்துத் தங்கினர்.சிறிது நேரம் கழித்து ஹோட்டலில் சாப்பாடு சரியில்லை என்று கூறி 4 பேரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களது பெயர் மஜீத், மெஹ்ஸம், தாவூத் மற்றும் இய்நெல்லாஹ் எனத் தெரியவந்தது. இவர்களில் 2 பேரின் விசா காலாவதியாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரித்தபோது விசாவை புதுப்பிக்க விண்ணப்பித்து இருப்பதாகவும், உடனே கிடைத்துவிடும் என்றும் கூறினர். இதையடுத்து போலீசார் திருவனந்தபுரத்திலுள்ள வெளிநாட்டினர் பதிவுத்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியது உண்மை எனத் தெரியவந்தது. ஆனாலும் அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களது போட்டோக்களை எடுத்து கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.அவர்களது போட்டோக்களை பார்த்த ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் சேர்த்தலாவில் உள்ள ஒரு கடையில் உரிமையாளரை ஏமாற்றி 40 ஆயிரத்தை ஒரு கும்பல் அபேஸ் செய்தது. அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானவர்களின் முகமும், ஈரானைச் சேர்ந்தவர்களின் முகமும் ஒரே போல இருந்தது.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காகச் சேர்த்தலா சப்-இன்ஸ்பெக்டர் திருவனந்தபுரம் விரைந்தார். விசாரணையில் சேர்த்தலாவில் பணத்தை அபேஸ் செய்தது அந்தக் கும்பல் தான் எனத் தெரியவந்தது.இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் பணப் பரிமாற்ற நிறுவனங்களில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கடந்த ஜனவரி 30ம் தேதி டெல்லி வந்த இவர்கள், டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளிலும் இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். 4 பேரிடமும் திருவனந்தபுரம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.