பீகாரில் நோட்டா தந்த அதிர்ச்சி! ஆட்டம் கண்ட அரசியல் கூடாரங்கள்!
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஒருவழியாக முடிந்து ஆளும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக் கட்சிகள் மொத்தம் உள்ள 243 இடங்களில் 125 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து களம் கண்ட மெகா கூட்டணியான ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்கள் மட்டுமே கிடைத்தது.இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4வது முறையாக நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ஏற்கிறார்.
மேலும் பீகார் தேர்தல் புள்ளி விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டமாகத் தேர்தல் நடந்தது. பீகார் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.3 கோடி ஆகும். இதில் கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் ஜனநாயக கடமையைச் செய்துள்ளனர். அதாவது பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 57.09 சதவீதமாகும்.
ஆனால் இந்த 57.09 சதவீதத்தில் கிட்டத்தட்ட 1.7 சதவீதம் அதாவது 7 இலட்சத்து 6 ஆயிரத்து 252 வாக்குகள் "நோட்டாவில்" விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் நோட்டாவில் வாக்களிக்கலாம் என்ற நடைமுறை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி 2013 ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.இதற்கு முன்னர் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் வாக்குச்சாவடியில் உள்ள 49-ஓ என்ற படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும்.
பீகார் சட்டமன்றத்தில் பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை விட நோட்டாவின் சதவீதம் அதிகமாக விழுந்துள்ளது. இது அரசியல் தலைவர்கள், கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள் இடையே பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த வாக்குகள் எதிரணியில் இருந்த மெகா கூட்டணிக்கு விழுந்திருந்தால் பாஜக கூட்டணியின் கூடாரம் பீகாரில் திவாலாகியிருக்கும்.