நான் தவறு செய்துவிட்டேன் ராகுல் காந்திக்கு மகிழ்ச்சி - புலம்பும் அமித் ஷா
நான் தவறு செய்துவிட்டேன். ஆனால் கர்நாடக மாநில மக்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமித்ஷா, "ஊழல் மலிந்த அரசுக்கு போட்டி வைத்தால் அதில் எடியூரப்பாவின் அரசுக்குத் தான் முதல் இடம் கிடைக்கும்" என்று கூறினார். அதாவது சித்தராமையா என்று கூறுவதற்கு பதிலாக, பாஜக முன்னாள் முதல்வரான எடியூரப்பா பெயரை குறிப்பிட்டார்.
அப்போது அருகில் மற்றொருவர், அமித் ஷாவிடம் எடுத்துரைக்க மறுபடி சித்தராமையா அரசு என குறிப்பிட்டார். அப்போது எடியூரப்பாவும் அருகில் இருந்தார். அமித்ஷாவின் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் மைசூரில் பிரசார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, எடியூரப்பா விஷயத்தை பேசியதை குறிப்பிட்டு, “நான் வாய்தவறி சித்தராமையா அரசு என்று கூறுவதற்கு பதிலாக எடியூரப்பா அரசு என்று கூறியதை கொண்டு காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ராகுல் காந்தியிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால், நான் தவறு செய்துவிட்டேன். ஆனால், கர்நாடக மாநில மக்கள் தவறு செய்யமாட்டார்கள். அவர்களுக்கு சித்தராமையா அரசை பற்றி நன்றாக தெரியும்” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com