அமைச்சரவையில் அதிக இடங்கள்... பா.ஜ.க பிளான் என்ன?!
பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கூட்டணியே மீண்டும் ஆட்சியை தக்க வைத்தாலும், பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. எனினும் தங்கள் முதல்வர் நிதிஷ்தான் என்று பாஜக அறிவித்து உள்ளது. முதல்வர் குழப்பம் தீர்ந்துவிட்ட போதிலும், பாஜக மற்ற பிளான்கள் என்ன என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தை விட, பாஜக அதிக இடங்களை பெற்றிருப்பதால் இந்த முறை அமைச்சரவை கூட்டத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள் பாஜக தொண்டர்கள்.
கடந்த முறை நிதிஷ்குமார் அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இருந்தனர். இதில் 19 போ் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்களும், மற்றவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இந்த முறை இது அப்படியே தலைகீழ் ஆகும் எனத் தெரிகிறது. அதேபோல் அமைச்சர்கள் துறை எண்ணிக்கை 36 ஆக உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. அதிக இலக்காக்களை பெறுவதுடன், சபாநாயகர் பதவியையும் பாஜக கைப்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது. இதெல்லாம் செவி வழி செய்திகள் என்றாலும், இது தொடர்பாக விரைவில் பாஜக டெல்லி தலைமை, நிதிஷ் குமார் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.