மோடி சட்டையை பிடித்தா கேட்க முடியும்? பதவியை ராஜினாமா செய்கிறேன் - கொதித்த அதிமுக எம்.பி.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களும் காவிரி நதிநீர் பங்கீட்டுக் கொள்வதற்கான ‘திட்டம்’ ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடு, வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. ஆனால், கடைசி வரை காவிரி தொடர்பான எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் மோடி அரசு தமிழக மக்களை ஏமாற்றி விட்டது.
இதற்கிடையில், பாஜகவின் தயவில் ஆட்சி நடப்பதாக ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அதிமுக உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாவிட்டால் தற்கொலை செய்யவும் தயார் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசினார்.
இந்த நிலையில் இது குறித்து டெல்லியில் பேட்டி அளித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன், “ காவிரி மேலாண்மை வாரியத்துக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்; நாடாளுமன்றத்தில் அவைத்தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன்.
காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். விவசாயிகள் பிரச்சனையில் அரசியல் செய்ய வேண்டாம் என கூறிவந்தேன். காவிரி விவகாரத்தில் அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சி தலைமையிடம் வலியுறுத்துவேன்.
கர்நாடக தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. பிரதமர் மோடி சட்டையை பிடித்தா கேட்க முடியும்? மக்களுக்கும், மாநிலத்திற்கும் சேவை செய்யவே எம்.பி. பதவி. ராஜினாமா எனது தனிப்பட்ட கருத்து, மக்களுக்காக நான் ராஜினாமா செய்கிறேன்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com