அளவுக்கதிகமான தங்கம், பொருட்கள் விமான நிலையத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற மும்பை அணியின் வீரர் க்ருனால் பாண்ட்யா மும்பை விமான நிலையத்தில் வைத்து அளவுக்கு அதிகமான தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்டார். தெரியாமல் கொண்டு வந்ததாகவும், உரிய அபராதத் தொகையை கட்டுவதாகவும் கூறியதை தொடர்ந்து அவரை அதிகாரிகள் விடுவித்தனர்.கொரோனா பரவல் அபாயத்திற்கு இடையே ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. போட்டிகள் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக சென்று விட்டனர்.
மீதமுள்ள மும்பை அணி வீரர்கள் நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் சுங்க இலாகா மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வீரர்கள் கொண்டுவந்த உடமைகளை பரிசோதித்தனர். அப்போது க்ருனால் பாண்ட்யாவின் பேக்கில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் மற்றும் பொருட்களை கொண்டு வரக்கூடாது. ஆனால் க்ருனால் பாண்ட்யாவின் பேக்கில் கூடுதலாக தங்கம் மற்றும் பொருட்கள் இருந்தன. இதையடுத்து அவரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விமான நிலையத்தில் பிடித்து வைத்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது தங்கம் மற்றும் பொருட்களை எந்த அளவுக்கு கொண்டு வரவேண்டும் என்று தனக்கு தெரியாது என்றும், முதல் முறை என்பதால் மன்னிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் கூடுதலாக கொண்டு வந்ததற்கு உரிய பொருட்களுக்கான அபராதத் தொகையை கட்டிவிடுவதாக அதிகாரிகளிடம் அவர் கூறினார். இதையடுத்து க்ருனால் பாண்ட்யாவிடமிருந்து உரிய அபராதத் தொகையை வாங்கிவிட்டு அதிகாரிகள் அவரை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.