நடிகை பலாத்கார வழக்கு சாட்சியை மிரட்ட நெல்லையிலிருந்து சிம் வாங்கிய எம்எல்ஏவின் செயலாளர்

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் சாட்சியை மிரட்டிய கேரள எம்எல்ஏ கணேஷ் குமாரின் செயலாளர் நெல்லையிலிருந்து சிம்கார்டு வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கைக்கு ஏற்ப ஒரு பெண் நீதிபதி தலைமையில் இந்த தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தனி நீதிமன்றம் செயல்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும், பாதிக்கப்பட்ட நடிகையும் கேரள உயர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தனர்.

விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து வருவதால் விசாரணையை நிறுத்தி வைத்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று அவர்களது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் 16ம் தேதி வரை விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக விசாரணை நீதிமன்றம் செயல்படுவதாக போலீஸ் தரப்பு மற்றும் அரசுத் தரப்பிலேயே புகார் கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய சாட்சியான விபின்லால் என்பவர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க வேண்டும் என்று கூறி ஒருவர் தன்னை மிரட்டியதாக போலீசில் புகார் செய்தார். முதலில் செல்போன் மூலமும், பின்னர் கடிதம் மூலமாகவும் அந்த நபர் மிரட்டல் விடுத்ததாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சாட்சியை மிரட்டியது கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவும், நடிகருமான கணேஷ் குமாரின் அலுவலக செயலாளர் பிரதீப் குமார் என தெரிய வந்தது. இதையடுத்து பிரதீப்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக காசர்கோடு நீதிமன்றத்தில் போலீசார் ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பது: நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியான விபின்லாலை மிரட்டியது எம்எல்ஏ கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் என தெரியவந்துள்ளது. இவர் முதலில் செல்போனிலும், பின்னர் கடிதங்கள் மூலமாகவும், விபின்லாலின் உறவினர்கள் மூலமாகவும் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் கிடைத்துள்ளன. விபின்லாலை மிரட்டுவதற்கு பிரதீப்குமார் திருநெல்வேலியிலிருந்து சிம்கார்டு வாங்கியுள்ளார். அந்த சிம் கார்டில் இருந்து விபின்லாலை மட்டுமே அவர் அழைத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர் பிரதீப்குமார் தன்னுடைய செல்போனில் இருந்து மேலும் சில முக்கிய நபர்களை அழைத்து பேசியுள்ளார். எனவே இந்த சம்பவத்தில் சில முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இதனால் இது குறித்து கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>