டீ, நொறுக்கு தீனிகளுக்கு ரூ. 3 கோடி செலவு செய்த முதலமைச்சர்! - ஆய்வில் அதிர்ச்சி

நாளொன்றுக்கு 18,500 கப் அளவிற்கு தேநீர் வழங்கப்படுவதாகவும், டீ செலவு மட்டும் ரூ. 3 கோடி என்ற அதிர்ச்சித் தகவலை தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். இந்நிலையில் முதல்வர் அலுவலகத்தில் வழங்கப்படும் தேனீருக்கு ஆன செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு அந்த அலுவலகம் அளித்திருக்கும் பதில்தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, முதல்வர் அலுவலகத்தில் தேநீர் மற்றும் நொறுக்குத் தீனிகளுக்கு செய்யப்படும் செலவு 577 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2015-2016-ஆம் ஆண்டு, 58 லட்சம் ரூபாயாக இருந்த முதல்வர் அலுவலக தேநீர் செலவு, 2017 - 2018ஆம் ஆண்டுகளில் 3.4 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை மும்பை மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் நிருபம் தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். தேநீர் மற்றும் நொறுக்குத் தீனிகள் வாங்கியதில் மகாராஷ்டிர அரசு ஊழல் செய்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு 18 ஆயிரத்து 591 டீ கப்-களில் டீ வழங்கப்படுவதாக அளிக்கப்பட்டுள்ள தகவல் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>