கோலிக்கு பிடிக்காத வீரர்... ரோல் மாடல் குறித்து மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் தேவ்தத் படிக்கல். அறிமுக தொடரான இதில் தொடர்ந்து சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி முத்திரை பதித்தார். இவர் விளையாடிய விதம் ஒரு அறிமுக வீரரை போல் இல்லாமல் அனுபவ வீரரை போல் இருந்தது. பெங்களூரு அணிக்கு நீண்ட காலமாக இருந்த ஓப்பனிங் பிரச்சனையை இவரின் ஆட்டத்திறன் மூலம் அந்த குறையை போக்கினார். மொத்தம் 15 போட்டிகளில் விளையாடிய தேவ்தத் படிக்கல் 473 ரன்களை குவித்தார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். இதனால் தற்போது இவருக்கு வளர்ந்து வரும் வீரர் விருது அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது ரோல் மாடல் யார் என்பது தொடர்பாக பேசியுள்ளார் படிக்கல். ``இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலம் ஓப்பனிங் விளையாடிய கவுதம் கம்பீர்தான் எனது ரோல் மாடல். அணி பிரச்சனையில் இருக்கும்போது கம்பீரின் ஆட்டம் அபாரமாக இருக்கும். அதனால் தான் அவரை பிடிக்கும். அவரைப் போலவே விளையாடினேன். இந்த சீசனில் ரன்களை சேர்க்க முடியும் என்று நம்பினேன். அதன்படி விளையாடவும் செய்தேன்" எனக் கூறியுள்ளார். தேவ்தத் படிக்கல் விளையாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் விராட் கோலி. இவருக்கும் கம்பீருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.