சென்னை போலீஸ் கமிஷனர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு: மோசடி நபர் கைது
காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகளை முகநூலில் உருவாக்கி அவர்களுக்கு தெரிந்தவர்களை ஏமாற்ற முயன்ற மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் பதுங்கி இருந்தபோது அந்நபரும் இன்னொருவரும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி அவரது தொடர்பில் உள்ளவர்களிடம் பணத்தை ஏமாற்ற முயன்றதாக கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி புகார் பதிவு செய்யப்பட்டது. மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு இதை விசாரித்து வந்தது. கமிஷனர் தவிர டிஜிபியான சுனில்குமார், கூடுதல் கமிஷனர் தினகரன், ஐஜி சந்தோஷ்குமார், இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கூடுதல் டிஜிபி சந்தீப் ரத்தோர் போன்ற ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரிலும் முகநூலில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூலில் ஐபிஎஸ் அதிகாரிகள் போல தங்கள் காட்டி பணத்தை ஏமாற்றுவதே இவர்கள் நோக்கம் என்று கூறப்படுகிறது. இக்கணக்குகளை உருவாக்கிய நபர் ராஜஸ்தானில் இருப்பது புலனாய்வில் தெரிய வந்தது. ஒரு வாரத்திற்கும் மேலாக ராஜஸ்தானில் முகாமிட்ட சென்னை போலீசார் இதற்கு மூளையாக செயல்பட்ட ஷகீல் கான் மற்றும் ரவீந்தர் குமார் ஆகியோரை ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத்பூர் என்ற இடத்தில் கைது செய்துள்ளனர். தமிழக அதிகாரிகள் தவிர ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில அதிகாரிகள் பெயரிலும் ஷகீல் கான் போலி முகநூல் கணக்குகளை தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.