மதுரையில் பணியின்போது மரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு 25 லட்சம் உதவி
மதுரையில் ஜவுளி கடையில் பற்றிய தீயை அணைக்கப் போராடிய போது இரண்டு தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். அவர்களுக்கான உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மதுரையில் சனிக்கிழமை அதிகாலையில் ஜவுளி கடை ஒன்றில் தீப்பிடித்தது. மதுரை விளக்குத்தூண் பகுதியில் நவபக்தகானா தெருவில் உள்ள ஜவுளி கடை வெள்ளியன்று விற்பனை முடிந்து இரவு 11 மணியளவில் மூடப்பட்டது. அக்கடையில் அதிகாலை 2:30 மணியளவில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. 10 அடி அகலம் மற்றும் 30 அடி நீளம் கொண்ட பழைய கட்டடத்தில் இக்கடை இயங்கி வந்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில், அனுப்பானடி, திடீர் நகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி, சிவராஜன், கல்யாண்குமார், சின்னகறுப்பு ஆகிய தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த கட்டடத்திற்குள் நுழைந்து தீயை அணைக்க போராடியுள்ளனர். அப்போது கட்டடம் இடிந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவராஜன் ஆகிய வீரர்கள் மீது விழுந்து அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர்களை அதிகாலை 5 மணிக்கு மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி (வயது 30) இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். காயமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.