சென்னை உள்பட 3 மாவட்டங்களில் நீடிக்கும் கொரோனா பரவல்.. மற்ற மாவட்டங்களில் சரிவு..
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் 85 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவி, 75 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து விட்டனர். பல மாநிலங்களில் நோய் பரவல் கட்டுப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்கு பின்பு படிப்படியாக குறைந்து நாளொன்றுக்கு தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு கீழ் சென்றிருக்கிறது.நேற்று(நவ.14) மாநிலம் முழுவதும் 75,326 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1912 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 56,372 பேராக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2494 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 27,752 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 12 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,466 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் படிப்படியாக குறைந்து வருகிறது. திருவள்ளூர்(91), காஞ்சிபுரம்(85), சேலம்(92), ஈரோடு(63), திருப்பூர்(76) மாவட்டங்களில் நேற்று புதிய பாதிப்பு நூற்றுக்கும் கீழ் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் சராசரியாக 50, 60 பேருக்குத்தான் நேற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் தற்போது 17,154 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு புதிதாக 1800 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். அக்டோபர் கடைசி வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. நவம்பர் முதல் தேதியன்று சென்னையில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தினமும் குறைந்து, நேற்று 509 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 139 பேர், கோவையில் 182 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் இது வரை 2 லட்சத்து 8179 பேருக்கும், செங்கல்பட்டில் 45,837 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 39,525 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26,700 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.