மண்டல காலம் நாளை தொடங்குகிறது சபரிமலையில் இன்று நடை திறப்பு
கொரோனா அச்சத்திற்கு இடையே பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. நாளை முதல் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டபோது 5 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த மாதம் நடை திறந்திருந்த நாட்களில் தினமும் 250 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, முன்பதிவு செய்யும்போது 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை இணைக்க வேண்டும் என்பன உட்பட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததால் தினமும் 200க்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் பிரசித்திபெற்ற மண்டல கால பூஜைகள் நாளை தொடங்குகின்றன. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் டிசம்பர் 26ம் தேதி வரை நடை திறந்திருக்கும். மண்டல காலத்திலும் பக்தர்கள் தரிசனம் செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. தரிசனத்திற்கு செல்லும் போது 24 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பக்தர்கள் கையில் வைத்திருக்க வேண்டும். வெளிமாநில பக்தர்கள் வசதிக்காக சபரிமலை செல்லும் வழியில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 7 மணியளவில் புதிய மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெயராஜ் போத்தி மற்றும் ரெஜிகுமார் ஆகியோர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். தந்திரி கண்டரரு ராஜீவரரு புனித நீர் ஊற்றி இருவருக்கும் காதில் வேத மந்திரங்கள் ஓதிக் கொடுப்பார். கார்த்திகை 1ம் தேதியான நாளை முதல் இவர்கள் இருவரும் தான் சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோவில் பூஜைகள் நடத்துவார்கள். அடுத்த ஒரு வருடம் வரை இவர்களது தலைமையில் தான் சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோவில்களில் பூஜைகள் நடைபெறும். நாளை காலை முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த மண்டல காலத்தில் தரிசனம் செய்யவும், நெய்யபிஷேகம் உட்பட பூஜைகள் நடத்தவும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நெய்யபிஷேகம் பக்தர்களால் நேரடியாக நடத்த முடியாது. பக்தர்கள் தாங்கள் கொண்டு செல்லும் நெய்யை ஒரு கவுண்டரில் கொடுக்க வேண்டும். பின்னர் ஏற்கனவே அபிஷேகம் செய்த நெய் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும்.
பக்தர்கள் தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் போது இரண்டு அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். இதே போல பம்பையில் குளிப்பதற்கு அனுமதி கிடையாது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். வழக்கமாக சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்தில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். ஆனால் இவ்வருடம் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. மண்டல மற்றும் மகர காலத்தில் இதுவரை 1.28 லட்சம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு தொடங்கிய இரண்டு நாட்களிலேயே தரிசனத்திற்கான முன்பதிவு அனைத்தும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.