மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு..
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. அங்கு பள்ளிகள், கோயில்கள் போன்றவை திறக்கப்படவில்லை.
இதற்கிடையே, அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவர், நீங்கள்(உத்தவ்) தீவிர இந்துத்துவா கொள்கை கொண்டவர். ராமஜென்ம பூமிக்கு சென்று வந்திருக்கிறீர்கள். ஆனாலும், மகாராஷ்டிராவில் ஏன் கோயில்களைத் திறக்காமல் வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்குப் பிடிக்காத மதச்சார்பின்மைக்கு நீங்கள் மாறி விட்டீர்களா? என்று கேட்டிருந்தார்.
இதற்கு உத்தவ் தாக்கரே அளித்த பதிலில், எனக்கு உங்கள் சர்டிபிகேட் எல்லாம் தேவையில்லை என்று காட்டமாகக் கூறியிருந்தார். மேலும், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டிருக்கும் போது கவர்னர் எப்படி இது போல் பேசலாம் என்று பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், கவர்னரின் பேச்சை கண்டித்திருந்தார். ஆனாலும், மும்பை, புனே போன்ற இடங்களில் கோயில்களின் முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில், நவ.16ம் தேதி(நாளை) முதல் கோயில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படலாம் என்று மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு கிருமிநாசினி அளித்து, சமூக இடைவெளி விட்டு வழிபாடு செய்வதற்கு வழிபாட்டு தலங்களின் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.