தக்காளி லாரியில் கேரளாவுக்கு கடத்தப்பட்ட பயங்கர வெடிபொருட்கள் 2 பேர் கைது
ஈரோட்டிலிருந்து கேரளாவுக்கு தக்காளி லாரியில் பயங்கர வெடிபொருட்கள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரை கேரள போலீசார் இன்று கைது செய்தனர்.
கோவை- கேரளா எல்லையில் உள்ளது வாளையார். கோவை, ஈரோடு உள்பட தமிழக பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பாலக்காடு வழியாக கேரளா செல்வதற்கு இந்த வாளையார் பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். இங்கு தமிழக மற்றும் கேரள மாநிலத்தின் சோதனைச் சாவடிகள் உள்ளன. தற்போது கொரோனா காலம் என்பதால் பெரும்பாலான வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே இரு மாநிலங்களிலும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை வாளையார் அருகே ஒரு மினி லாரி சென்று கொண்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை வாளையார் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ஈரோட்டில் இருந்து கேரள மாநிலம் அங்கமாலி என்ற இடத்திற்கு தக்காளி கொண்டு செல்வதாக லாரி ஓட்டுனர் போலீசாரிடம் கூறினார்.
ஆனால் சந்தேகமடைந்த போலீசார், தக்காளி பெட்டிகளை இறக்கி வைத்து பரிசோதனை நடத்தினர். அப்போது தக்காளி பெட்டிகளின் அடியில் 35 சிறிய பெட்டிகளில் சக்தி வாய்ந்த ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர் வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது போலீசுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அந்த பெட்டிகளில் 7,000 டெட்டனேட்டர்களும், 7,500 ஜெலட்டின் குச்சிகளும் இருந்தன. இதையடுத்து அந்த வெடிபொருளை கைப்பற்றிய போலீசார், லாரியில் இருந்த டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தர்மபுரியை சேர்ந்த ரவி (38) மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபு (30) என தெரியவந்தது. அந்த வெடிபொருட்கள் எதற்காக, யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.