பழம்பெரும் பெங்காலி நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி கொரோனா பாதித்து மரணம்

கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த பழம்பெரும் பெங்காலி நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி (85) மரணமடைந்தார். உலகப் பிரசித்தி பெற்ற இயக்குனர் சத்யஜித்ரேயின் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்கு பத்மபூஷண், தாதா சாகிப் பால்கே உட்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன.

1960 மற்றும் 70களில் பெங்காலி சினிமாவின் முகமாக இருந்தவர் சவுமித்ரா சாட்டர்ஜி. கொல்கத்தாவின் புறநகர் பகுதியான சியால்டா ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள மிர்சாபூரில் தான் இவர் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்ட இவர் நாடகங்களில் நடித்து வந்தார். இவரது தந்தை மற்றும் தாத்தாவும் அப்போது நாடகங்களில் நடித்து வந்தனர். நாடகங்களில் நடித்து வந்த போதுதான் இவருக்கு ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளர் வேலை கிடைத்தது. இந்த சமயத்தில் தான் சத்யஜித் ரேயுடன் சவுமித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கத்தின் மூலம் தான் சத்யஜித் ரேயின் 15 படங்களில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு சவுமித்ரா சாட்டர்ஜிக்கு கிடைத்தது.அபுர் சன்சார், தீன் கன்யா, அபிஜான், சாருலதா உள்பட சத்யஜித் ரேயின் பிரசித்தி பெற்ற ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. இந்திய சினிமாவிலேயே சிறந்த எதார்த்தமான நடிகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. 1970களில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க இவர் மறுத்துவிட்டார். அதன் பின்னர் 2004ல் இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தாதா சாகிப் பால்கே விருதும் இவருக்கு கிடைத்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 6ம் தேதி சவுமித்ரா சாட்டர்ஜிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின்னர் கொரோனா பாதிப்பு குணமான போதிலும் கடந்த இரு தினங்களுக்கு முன் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் இன்று சவுமித்ரா சட்டர்ஜி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு பல்வேறு திரையுலக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More News >>