மண்டல கால பூஜை சபரிமலை கோவில் நடை திறப்பு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 41 நாள் நடைபெறும் மண்டல கால பூஜைகள் நாளை முதல் தொடங்குகின்றன. பக்தர்கள் நாளை முதல் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மண்டல காலம் என்பது சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

கார்த்திகை 1ம் தேதி தொடங்கி 41 நாட்கள் நடைபெறும் இந்த மண்டல கால பூஜையின் போது சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் செல்கின்றனர். இதனால் மண்டல காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சில நாட்களில் 20 மணி நேரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் காத்திருந்து ஐயப்பனை தரிசிப்பது உண்டு. ஆனால் இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. கடந்த மாதம் முதல் தான் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் கடும் நிபந்தனைகளுடன் தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிரசித்திபெற்ற மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நாளை முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. நாளை முதல் தினமும் 1,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமாக மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் போது சபரிமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். ஆனால் இன்று நடை திறந்த போது கோவில் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் மட்டுமே காணப்பட்டனர். பக்தர்கள் இம்முறை சபரிமலைக்கு 2 வழிகளில் மட்டுமே செல்ல முடியும்.

எருமேலியிலிருந்து கணமலை வழியாக பம்பைக்கும், வடசேரிக்கரை யிலிருந்து லாகா வழியாக மட்டுமே பம்பை செல்ல முடியும். புல்மேடு, வண்டிப்பெரியார் உட்பட மற்ற அனைத்து பாதைகளும் மூடப்படும். இதேபோல பம்பையில் இருந்து சன்னிதானம் செல்வதற்கு சுவாமி அய்யப்பன் ரோடு வழியாகவே செல்ல முடியும்.

More News >>