2021 தேர்தலுக்குள் புதிய கட்சி... ஆலோசனைக்காக காத்திருக்கும் மு.க. அழகிரி!
திமுக தலைவர் கருணாநிதி இருந்த போது, பல்வேறு பிரச்னைகள் காரணமாக கட்சியில் இருந்து மு.க.அழகிரியை நீக்கினார். ஆனாலும் மு.க.அழகிரி அவ்வப்போது கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்து வந்தார். கருணாநிதியைத் தவிர யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும் கூறி வந்தார். கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியினரும் அவரை முழுமனதாக ஏற்றுக் கொண்டு விட்டனர். இந்த நிலையில், அழகிரி மீண்டும் கட்சியில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவரை ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளவில்லை. கருணாநிதி குடும்பத்தினர் கூட, அழகிரிக்கு ஆதரவாக பேசிப் பார்த்தும் ஸ்டாலின் மசியவே இல்லை. அழகிரியை சேர்த்தால் கட்சியில் கட்டுப்பாடு போய் விடும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதன்பிறகு, கருணாநிதி மறைந்து ஓராண்டு முடிந்து நினைவு நாளில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் பேரணி நடத்தி, கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, திமுகவில் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொள்வதாக பேட்டியளித்தார். ஆனாலும், ஸ்டாலின் அவரை கட்சியில் சேர்த்து கொள்ளாமல் மவுனம் சாதித்து வருகிறார். இதற்கிடையே, திமுகவில் மீண்டும் இடம் கிடைக்காததை அடுத்து, வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி புதிய கட்சி ஒன்றை அழகிரி துவக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, ``சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவா அல்லது புதிய கட்சி தொடங்குவதா என்பது தொடர்பாக எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின் முடிவுகள் தெரிவிக்கப்படும். கொரோனா காரணமாக ஆதரவாளர்களை இதுவரை சந்திக்கவில்லை. தற்போது திமுகவில் புகைச்சல் அதிகமாகி இருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் திமுகவின் நிலையை நீங்களே தெரிந்துகொள்வீர்கள். தற்போது திமுகவில் இருக்கும் தலைவர்கள் பதவிக்காகவே உள்ளனர் கலைஞர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.