இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா பாதிப்பா? தனிமைப்படுத்திக் கொண்டார்..
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு கொரோனா பாதித்துள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இங்கிலாந்து நாட்டிலும் பரவியிருக்கிறது. அங்கு 2வது அலையாக மீண்டும் தொற்று பரவியதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டிருப்பதால், அரசு விதிமுறைகளின்படி தானும் தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், டவுனிங் தெரு எண்10ல் உள்ள பிரதமர் இல்லத்தில் இருந்தபடியே பணியாற்றப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
இது குறித்து, பிரதமரின் அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில், பிரதமர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடத்திய எம்.பி.க்கள் கூட்டத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யான லீ ஆன்டர்சனும் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அரசு விதிகளின்படி பிரதமர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட பல்வேறு உலக தலைவர்களுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.