சபரிமலையில் இன்று முதல் மண்டல காலம் தொடங்கியது பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அதிகாலை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. முதல் இரண்டு மணி நேரத்திலேயே 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர். கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள் கடும் விரதம் இருந்து சபரிமலையில் தரிசனம் நடத்த செல்வார்கள். இவ்வருட மண்டல காலத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நடைதிறந்த பின் 7 மணியளவில் புதிய மேல்சாந்திகள் ஜெயராஜ் போத்தி மற்றும் ரெஜிகுமார் ஆகியோர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியான இன்று முதல் சபரிமலையில் பிரசித்திபெற்ற மண்டல கால பூஜைகள் தொடங்கின. இன்று அதிகாலை 5 மணிக்கு சபரிமலையில் புதிய மேல்சாந்தியான ஜெயராஜ் போத்தியும் மாளிகைப்புறத்தில் புதிய மேல்சாந்தி ரெஜிகுமாரும் கோவில் நடையை திறந்து மண்டல கால பூஜைகளை தொடங்கி வைத்தனர். கொரோனா பரவலை தொடர்ந்து மண்டல காலத்தில் தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பக்தர்களையும், சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பக்தர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் நேற்று இரவு முதலே சபரிமலைக்கு வரத் தொடங்கினர்.

இன்று அதிகாலை 3 மணிக்கு பின்னர் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட போது பக்தர்கள் ஐயப்பனை தரிசித்தனர். கொரோனா நிபந்தனைகளின் படியே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இரண்டு அடி இடைவெளி விட்டு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர். முதல் இரண்டு மணி நேரத்தில் 350 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர்.

More News >>