ஜேசிபி எந்திரம் ஏறி மலைப்பாம்பு சாவு.. டிரைவரை கைது செய்த வனத்துறை
சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜேசிபி எந்திரம் ஏறி ஒரு மலைப்பாம்பு செத்தது. இதையடுத்து வனத்துறையினர் ஜேசிபி டிரைவரை கைது செய்தனர். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வாணியம்பாறை என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு பகுதியில் இன்று ஜேசிபி எந்திரம் மூலம் மண் தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தன. நூர் அமீன் என்பவர் ஒரு ஜேசிபி இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தார் அப்போது அந்த இடத்தில் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதை டிரைவர் நூர் அமீன் கவனிக்கவில்லை. எதிர்பாராவிதமாக அந்த மலைப் பாம்பின் மீது ஜேசிபி இயந்திரம் ஏறியது.
இதில் சம்பவ இடத்திலேயே அந்த பாம்பு உடல் நசுங்கி செத்தது. இதுகுறித்து திருச்சூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த மலைப் பாம்பின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜேசிபி டிரைவர் நூர் அமீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1972 ம் வருட வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி மலைப்பாம்பை கொல்வதோ, அதை துன்புறுத்துவதோ கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதன்படி 3 முதல் 7 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மலைப் பாம்பைக் கொன்ற ஜேசிபி டிரைவர் நூர் அமீன் மீதும் வனத்துறையினர் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே திருச்சூர் அரசு மருத்துவமனையில் அந்த மலைப்பாம்பின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் புதைத்தனர்.