மணிக்கு 4 பேர் மரணம்.. டெல்லியில் மீண்டும் கொரோனாவின் பிடி இறுகுகிறது

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் டெல்லியில் மீண்டும் நோய் அதிகரிக்கிறது. 1 மணி நேரத்திற்கு சராசரியாக 4 பேர் மரணமடைகின்றனர். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த டெல்லி அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா நோய் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஜூலை மாதத்திற்குப் பின் நேற்று முதன்முதலாக நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது தினமும் சராசரியாக 40 ஆயிரத்திற்கும் குறைவான பேருக்கு மட்டுமே நோய் பரவுகிறது. கொரோனா பரவலின் தொடக்க கட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த மாநிலங்களில் டெல்லியும் இருந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக நோய் பரவல் டெல்லியில் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த இரு வாரங்களாக டெல்லியில் நோய் பரவும் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் 2ம் தேதி தான் டெல்லியில் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த மாதம் 2 பேர் மட்டுமே நோய் பாதித்து மரணமடைந்தனர்.ஆனால் ஏப்ரல் மாதத்தில் தினமும் சராசாரியாக 2 பேர் மரணமடைந்தனர். மே மாதத்தில் இது அதிகரித்து மொத்தம் 414 பேர் மரணமடைந்தனர். ஜூனில் இது பல மடங்கு அதிகரித்தது. அந்த மாதத்தில் 2,269 பேர் பலியானார்கள். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் செப்டம்பரில் மரண எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்த மாதத்தில் 917 பேர் உயிரிழந்தனர். சராசரியாக அந்த மாதத்தில் 30.5 பேர் இறந்தனர். அக்டோபரில் தினசரி இறப்போரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது. நேற்று டெல்லியில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,235 ஆகும்.

தற்போது டெல்லியில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 4 பேர் மரணமடைகின்றனர். இதையடுத்து டெல்லியில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத் துறை தீர்மானித்துள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் லெப்டினன்ட் கவர்னருடன் அவசர ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் டெல்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை வசதிகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

More News >>