டெலிவரி பாயாக பணியாற்றும் ஒலிம்பிக் வீரர்
ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்பதே பெரிய பெருமை. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றுவிட்டால்? அதன் பிறகு வாழ்க்கையே மாறிவிடும் என்றுதானே நாம் நினைக்கிறோம்! ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உணவினை வீட்டுக்குக் கொண்டு தரும் வேலையை செய்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஃபென்சிங் என்னும் வாள்வீச்சு விளையாட்டில் லண்டனில் 2012ம் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ரூபன் லிமர்டோ. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான க்யூபாவை சேர்ந்த ரமோன் ஃபோன்ஸ்ட் என்பவர் 1904ம் ஆண்டு ஃபென்சிங் விளையாட்டில் பதக்கம் வென்ற பிறகு 2012ம் ஆண்டில் ரூபன் லத்தீன் அமெரிக்க நாடான வெனிசூலாவிலிருந்து தங்கப்பதக்கம் வென்றார்.
வெனிசூலா நாட்டுக்காக ஃப்ரான்சிஸ்கோ ரோட்ரிக்கஸ் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்று 44 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை ரூபன் வென்று கொடுத்தார். ரூபனுக்கு தற்போது 35 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். அடுத்து டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் பங்குபெற வேண்டுமென்பது ரூபன் லிமர்டோவின் குறிக்கோள். வெனிசூலாவில் நிலவும் நெருக்கடி காரணமாக ரூபன் தற்போது போலந்து நாட்டில் வசித்து வருகிறார். கடந்த 19 ஆண்டுகளாக போலந்தில் வசிக்கும் ரூபன், வெனிசூலா வீரர்களுக்கென வாள்வீச்சு பயிற்சி மையமும் நடத்துகிறார். போலந்தின் லோட்ஸ் நகரில் ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தில் உணவுகளை கொண்டு சேர்க்கும் டெலிவரி பாயாக பயிற்சியில் இருக்கிறார் ரூபன். தினமும் ஏறத்தாழ 50 கிலோ மீட்டர் தூரம் டெலிவரிக்காக செல்லும் அவருக்கு வாரத்திற்கு 100 யூரோக்கள் கிடைக்கின்றன.
தன்னைப் போல இன்னும் அநேக வீரர்கள் இப்பணியில் இருப்பதாகவும் ரூபன் லிமர்டோ தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள படம் பலரது மனதையும் உருக்கியுள்ளது. "ஒவ்வொரு முறை உணவினை டெலிவரி செய்யும்போதும், அது 2021ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் நான் பதக்கம் வெல்ல அது துணை புரிவதாக நினைத்துக்கொள்வேன்" என்று அவர் கூறியுள்ளார்.