பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் சபரிமலையில் தரிசன நேரம் குறைப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டல சீசனில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தரிசன நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும்.இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி உள்ளன. 41 நாள் நீளும் மண்டல கால பூஜைகள் டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் பிரசித்திபெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடையும். வழக்கமாக மண்டல கால பூஜைகளின் போது சபரிமலையில் கால் வைக்க இடம் இருக்காது. ஆனால் இவ்வருடம் கொரோனா பரவலைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பக்தர்களுக்கும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களுக்கும் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு.

சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாற்றில் இதுவரை பக்தர்கள் எண்ணிக்கை மண்டல காலத்தில் இவ்வளவு குறைவாக இருந்தது கிடையாது. பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் சபரிமலையில் தரிசன நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மண்டல காலத்தில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.30 மானியளவில் நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு மட்டுமே நடை சாத்தப்படும். அதாவது கடந்த வருடம் வரை மண்டல காலத்தில் தினமும் 17 மணிநேரத்திற்கு மேல் நடை திறந்திருக்கும். அப்படியும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். பல மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இவ்வருடம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் இன்று முதல் சபரிமலையில் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டால் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். இதன்படி தினமும் 12 மணி நேரம் மட்டுமே நடை திறந்திருக்கும். இதற்கிடையே கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று சபரிமலையில் கூறுகையில், தேவைப்பட்டால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

More News >>