இது தமிழகமா, வடமாநிலமா?.. துப்பாக்கிச் சூடு குறித்து ஸ்டாலின்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் ( 70) இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இது தவிர இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 16 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை சத்திரப்பட்டி சேர்ந்த இளங்கோவன் என்பவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் அந்த இடம் தனக்கு சொந்தமானது என தொழிலதிபர் நடராஜன் விவசாயி இளங்கோவனிடம் தகராறு செய்து வந்தார். இது தொடர்பாக நடராஜன் பழனி முனிசிபல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இளங்கோவனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து நடராஜன் திண்டுக்கல் சப் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் அதிலும் இளங்கோவனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த கடந்த ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடராஜன் மேல் முறையீடு செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த இடம் தொடர்பாக இன்று காலை இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில், அப்போது திடீரென நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி மூன்று தடவை சுட்டுள்ளார். இதில் சுப்பிரமணிக்கு மார்பிலும் பழனிச்சாமிக்கு வலது தொடையிலும் குண்டு பாய்ந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயக்கம் அடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு தமிழகத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்! இது தமிழகமா, வடமாநிலமா? தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கிக் கலாச்சாரம்; கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம். காவல்துறையை வைத்திருக்கும் முதல்வருக்கு சுயவிளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும்தான் நேரம் இருக்கிறதா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.